இந்தியக் கடற்படையில் கப்பல் தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணி.. வணிகக் கப்பல்களில் நீண்ட பயணங்கள்.. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பணி.. ஐக்கிய நாடுகள் சபையில் உலகவங்கி ஆலோசகராக கம்போடியாவில் பணி … என்று ஒரு நீண்ட கடல் வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர் கடலோடி நரசய்யா! மிக நீண்ட கால உலகளாவிய பயண அனுபவங்களையும் வரலாற்று தேடுதல்களையும் தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்.
மேலும், கடலோடி நரசய்யா அவர்கள் மதராசபட்டினம், ஆலவாய், சொல்லொனா பேறு போன்ற நூல்களின் சொந்தக்காரர். தமிழக அரசின் சிறந்த வரலாறு மற்றும் பயண நூல்களுக்கான பரிசுகளை 4 முறை பெற்ற கடலோடி நரசய்யா அவர்களின் “நீலக்கடல் மீது கப்பல் விடுவோம்” என்ற புதிய நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக 22.8.2023 – அன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 2 முதல் 5 மணிவரை மெட்ராஸ் இலக்கியச் சங்க வளாகத்தில் வெளியீடு கண்டது.
தனது வாழ்க்கையைப் பயணங்களுக்காகவும், வரலாற்றுத் தேடல்களுக்காகவும் வடிவமைத்துக் கொண்ட மூத்த வரலாற்று அறிஞர் கடலோடி நரசய்யாவின் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு, அவரது நீண்ட அனுபவங்கள் குறித்து அவருடன் கலந்துரையாட தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களும், சென்னை பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். தமிழ்நாடு தொல்லியல் துறையில் இணை இயக்குநர் டாக்டர் சிவானந்தன் அவர்கள் இந்த நூலை வெளியிட்டு நிகழ்ச்சிக்குச் சிறப்பு செய்தார்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் இந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக ஆகஸ்ட் 22, 2023 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற வரலாற்று ஆய்வாளர் கடலோடி நரசய்யா அவர்களது நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்ற நூல் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வழியாக வெளியீடு கண்டது நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிகழ்ச்சி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்ற ஒரு நிகழ்ச்சியாகவும் அமைகிறது.
கடலோடி திரு நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தொடங்கிய காலகட்டம் முதல் இந்த அமைப்புடன் அதன் வரலாற்றுத் தேடல் மற்றும் ஆய்வுப் பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டவர். மிக நீண்ட காலமாக நமது செயற்குழுவில் இடம்பெற்று நமது ஆய்வுப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். அவரது எழுத்தில் உருவான இப்புதிய நூலை வெளியீடு செய்தது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புக்குப் பெருமை சேர்க்கின்ற ஒரு நிகழ்வாக அமைகிறது.
திரு நரசய்யா அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்று நம்மோடு வாழ்கின்ற ஒரு எடுத்துக்காட்டு. அவரது வாழ்க்கை அனுபவங்களும் செயல்பாடுகளும் அவருடைய பண்பு நலன்களும் இளையோர் கடைப்பிடிக்க வேண்டியவை. இதைக் கருத்தில் கொண்டு தான் மாணவச் செல்வங்களையும் அந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லியிருந்தோம்.
வந்திருந்த மாணவர்கள் கூறிச் சென்ற செய்திகள் எனக்குத் தனிப்பட்ட வகையில் மன நிறைவளிக்கும் வகையிலிருந்தன. கல்லூரியில் நாங்கள் புத்தகங்களைப் படிக்கின்றோம். ஆனால் இன்று நிகழ்ச்சியில் நாங்கள் கற்றுக் கொண்டவை ஏராளம் ஏராளம். இத்தகைய நிகழ்ச்சிகள் எங்களுக்குப் பிடித்திருக்கின்றன…. பயனுள்ள வகையில் இருக்கின்றன என்று மாணவர்கள் ஆர்வத்துடன் கூறினார்கள். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.
சிறந்ததொரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றோம் என்ற மன நிறைவு.
இந்த நூலைப் பெற விரும்புபவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்:
விலை: ரூபாய் 150/-
இணையம் வழி பெற
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation
அல்லது
https://wisdomkart.in/books…/tamil-heritage-foundation/
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகக் குழு
ஆகஸ்ட் 22, 2023
நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் — சென்னை மெட்ராஸ் இலக்கியச் சங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சில புகைப்படங்கள்