அனைவருக்கும் வணக்கம்!
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்திய “வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயலரங்கம்” சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணைய வழி கல்விக் கழகத்தில் நேரடியாக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
துவக்க விழா சிறப்புரையாக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மேனாள் கணிதத்துறைத் தலைவர், கணினித்துறை இயக்குநர் மற்றும் துணை முதல்வர் முனைவர் ப.பாண்டியராஜா அவர்களின் “கணிதவியல்” நூல் வெளியிடப்பட்டு, ஆசிரியர் அவர்களால் நூல் அறிமுக உரை வழங்கப்பட்டது.
மேலும் இந்நூலை தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர், தலைவர் சுபாஷினி அவர்களால் பெறப்பட்டு வாழ்த்துரை நிகழ்த்தி பயிலரங்கமானது துவங்கப்பட்டது.
பயிலரங்கத்தின் முதல் நாள் நிகழ்வாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் முனைவர் நா. மார்க்சிய காந்தி அவர்களால் தமிழ் வட்டெழுத்து பயிற்றுவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வெட்டாய்வாளர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்களால் பல்வேறு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பங்கேற்பாளர்களால் வாசிக்கவைக்கப்பட்டது.
பயிலரத்தின் மறுநாள் மற்றும் கடைசி நாளான டிசம்பர் 11-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு சுவடிகள் குழுமத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாதுகாப்பாளர் திருமிகு ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களாலும், சென்னை திருவான்மியூர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் நூல் நிலையத்தின் புலவர் மற்றும் காப்பாளர் முனைவர் கோ.உத்திராடம் அவர்களாலும் ஓலைச்சுவடி வாசிப்பு பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு ஓலைச்சுவடிகளின் வரலாறுகளையும் எடுத்துரைத்து, பங்கேற்பாளர்களுக்கு ஓலைச்சுவடிகளை வழங்கி படிக்கவும் வைத்தனர்.
பயிலரங்கத்தின் இறுதியாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்பு ஆலோசகரும், ஒடிசா மாநில முதல்வர் அலுவலகத்தின் தலைமை ஆலோசகருமான திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் (இ.ஆ.ப ஓய்வு) அவர்கள் நிறைவு விழா சிறப்புரை ஆற்றியும், பயிற்சியில் பங்கு பெற்ற பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் பயிலரங்கத்தை இனிதே நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: