Home FacultyISEAS-South & Asian Studies தமிழ்-ஜப்பானிய ஒப்பாய்வு : இணைய உரைத்தொடர் – நாள் 1

தமிழ்-ஜப்பானிய ஒப்பாய்வு : இணைய உரைத்தொடர் – நாள் 1

by Malarvizhi Baskaran
0 comment

தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு- வரலாறும் வளர்ச்சியும்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தெற்கு தூர கிழக்காசியவியல் நடுவம் சார்பாக 3/10/20 – 4/10/20 இரண்டு நாட்கள், தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு இணைய உரைத்தொடர் நடத்தப்பட்டது. இதன் முதல் நாள் – தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு – வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. திருமிகு மலர்விழி பாஸ்கரன் அவர்கள் நெறியாள்கை செய்ய திருமிகு பேராசிரியர் கண்ணன் அவர்கள் நோக்க உரை வழங்கினார்.அதில் 1985ஆம் ஆண்டு தான் முதன்முதலில் ஜப்பான் சென்ற பொழுது அங்கு ஜப்பான் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்து வியந்ததாகக் கூறினார்.

தமிழுக்கும் தூரக்கிழக்குக்கும் உள்ள தொடர்பை பேராசிரியர் சண்முகதாசு மற்றும் மனோன்மணி அவர்களும் துணையின்றி தொடர்பின்றி அறிந்திருக்க முடியாது என்றும் கூறினார். இவர்கள் இலங்கை சாகித்திய அகடமி விருது பெற்றவர்கள் என்பதையும் இங்கே நினைவூட்டினார். அவரைத் தொடர்ந்து திருமிகு சுபாஷினி அவர்கள் அறிமுக உரையாற்றினார். முனைவர் திரு சண்முகதாசு அவர்கள் தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு பற்றிப் பேசும் போது ஜப்பானிய ஆய்வில் ஈடுபட்ட கதையையும் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் 1981 ஆம் ஆண்டு பங்கேற்று அதில் முதல் வரிசையில் அமரும் வாய்ப்பை பெற்றதாகவும் கூறினார். 500க்கும் மேற்பட்ட தமிழ் ஜப்பானிய சொற்கள் பற்றியும் பேராசிரியரான உடன் இணைந்து சீனமொழி இந்தோனேசிய மொழி கொரிய மொழி ஐரோப்பிய மொழி கிரேக்க மொழி ஆகியவற்றை ஜப்பானிய மொழியோடு ஒப்பிட்ட அனுபவம் குறித்தும் பொற்கோ அவர்களுடன் தான் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டது குறித்தும் பகிர்ந்து கொண்டார். திராவிட மொழியுடன் ஜப்பானிய மொழியை ஒப்பிடும் நோக்கும் ஆய்வுகள் 1970 தொடங்கப்பட்டது எனவும் யாயோயி காலமும் சங்ககாலமும் ஒன்றாக இருப்பதையும் கூறினார்.

தமிழ் ஜப்பானிய ஒப்பீடு பற்றிக் கூறும்போது, ஜப்பானிய மொழியில் கூட்டு ஒலிகள் இல்லை, தமிழ்மொழி மெல்லினம் பெற்று வருவதையும் வாங்கு என்ற சொல் ஜப்பான் மொழியில் வகு எனவும் உறங்கு என்ற சொல் ஜப்பான் மொழியில் உறகு எனவும் தங்கை தக என வருவது என்பன போன்ற சிறந்த உவமைகளை முன்வைத்து விளக்கினார். பேராசியர் ஓநோவின் எண்வகை பயன்பாட்டுத்தொடர்பான பொல் வகைப்பாடுகள் குறித்தும் விளக்கிக்கூறினார். தம்பல் அடித்தல் ஜப்பானிய மொழியில் தம்போ என்பதற்கான பொருள் வயலை பண்படுத்துதல் அதாவது குறிப்பிட்ட கால நிலத்தை பயன்படுத்த பண்படுத்துதல் என விளக்கம் கூறினார். தமிழ் வார்த்தையில் மா மிருகம் குதிரை என பொருள் ஜப்பானிய மொழியில் மா குதிரை என அழைக்கப்படுவதையும் எடுத்துக் காட்டினார். தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள இடைச்சொற்களின் ஒற்றுமையை பற்றியும் கூறினார் கிருஷ்ணா என்றால் கருமை கருமலை என்னும் தமிழ் வார்த்தை ஜப்பானிய மொழியில் க்ரோ மனோ குரோ என்றால் கருப்பு எமனோ என்றால் மலை எனவும் விளக்கினார்.  ‘விசும்பின் வெண் திங்கள்’ என்னும் செய்யுளின் வரிகளைக் கூறி ’மிநேனோ சிறகு மோ’ என்ற ஜப்பானிய வார்த்தை ஒப்பிட்டு போவதை கூறினார்.

வேற்றுமை அல்லாத இடைச்சொற்கள் வருவதையும் கூறி இடைச் சொற்களுக்கான ஜப்பானிய வார்த்தை கையோசி எனவும் இடைச்சொற்கள் நவரத்தினம் போன்றது எனவும் கூறினார். நான்காவது கட்டத்தில் எல்லாச் சொல்லும் பொருள் பெற்றனவே என தொல்காப்பியம் குறிப்பிடுவதைச் சொல்லி இது போல ஜப்பானிய மொழியில் பொருளிலக்கணம் இல்லை எனவும் தொல்காப்பியம் படித்திருந்தால் மன்யுசிப்பாடல்கள் வேறு மாதிரியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார். ஐந்து வகையான பா வடிவங்கள் ஜப்பானிய மொழியில் இருப்பதாகவும் அதில் ஒன்றான  ‘தங்க’ வடிவ பா பற்றியும் கூறி பொற்கோ அவர்கள் சிந்தியல் வெண்பாவும்  தங்கப்பா வெண்பாவும் ஒன்றாக இருப்பதை ஒப்பிட்டு கூறியதை நினைவுறுத்தினார். பண்பாட்டு வகையிலே தமிழ்நாட்டில் மலை வழிபாடு போல  ஜப்பானிலும் மலையையே தெய்வமாக வழிபடுவதை ஒப்பிட்டுக் கூறினார். அதியமான் நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கிய நிகழ்ச்சியையும் அதே போன்று ஒரு சிறுவன் நாவற்பழத்தை ஜப்பானில் வழங்கிய வரலாற்றையும் ஒத்துப்போவதைச்சொல்லி வியப்பூட்டினார்.

பொங்கல் பண்டிகையோடு அவர்களுடைய பண்டிகையை ஒப்பு நோக்கி – போகிப் பண்டிகை இங்கு கொண்டாடுவதுபோல் ஜப்பானில் பழையதை எரித்து கொண்டாடும் முறையையும் நாம் பொங்கல் பானை வைத்து பொங்கலோ பொங்கல் என கூறுவது போல் அவர்கள் வீட்டை சுற்றி ஹொங்கரோ ஹொங்கர் என கூறி கொண்டாடுவதையும் சொல்லி ஆச்சர்யமூட்டினார். மேலும் உரையின் முடிவில் இனி வரும் இளைய தலைமுறையினர் மற்றும் ஆய்வு மேற்கொள்ள விரும்புவோரும் ஆங்கில வழியில் அல்லாமல் ஜப்பானிய மொழியைக் சிறிதேனும் கற்றுக்கண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். பேராசிரியர் கண்ணன் அவர்களும் ஆய்வாளர்களுக்கு இருமொழிப்புலமை வேண்டும் குறிப்பாக கொரியா ஜப்பான் முக்கியமாக சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். பார்வையாளர்களில் குமரகுருபரன் என்பவரும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் . முனைவர் சுபாஷினி அவர்கள் நிறைவுரை வழங்க திருமிகு மலர்விழி பாஸ்கரன் அவர்கள் நன்றியுரை வழங்க இவ்வாறாக தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பாக தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

 

அறிக்கை தயாரிப்பு – 

நா. காமினி பாஷ்யம் & மலர்விழி பாஸ்கரன்

You may also like

Leave a Comment