Home Dr.P.Pandiyarajah பத்துப்பாட்டு நூல்கள் – ஓர் அறிமுகம்

பத்துப்பாட்டு நூல்கள் – ஓர் அறிமுகம்

by admin
1 comment

முனைவர் ப.பாண்டியராஜா

சங்கத் தமிழ் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பத்துப்பாட்டு என்பது பத்து நெடும் பாடல்களைக் கொண்டது. இவற்றில் உள்ள பாடல்களை எட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர்.

பத்துப்பாட்டு நூல்களாவன:

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற கூத்தராற்றுப்படை. இவற்றை ஓர் அழகிய வெண்பா வரிசைப்படுத்தும்.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக் காஞ்சி – மருவினிய

கோல நெடுநல் வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

இவற்றுள், திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய நூல்களை நக்கீரர் இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றியுள்ளார். பொருநராற்றுப்படையின் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். இவரைப் பெண்பாற்புலவர். என்று கூறுவார் உளர். சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். முல்லைப்பாட்டைப் பாடியவர் நப்பூதனார். மதுரைக் காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் கபிலர். மலைபடுகடாம் என்ற நூலினை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இலக்கிய ஆய்வாளர்கள் நெடுநல்வாடை ஆசிரியரான நக்கீரரே சங்ககாலத்தைச் சேர்ந்த கணக்காயனார் மகனார் நக்கீரர் என்றும் திருமுருகாற்றுப்படையை இயற்றியதாகக் கூறப்படும் நக்கீரர் காலத்தால் மிகவும் பிற்பட்டவர் என்றும் கூறுவர்.

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகியவை ஆற்றுப்படை இலக்கியங்கள் எனப்படும். ஓர் அரசர் அல்லது வள்ளலைப் பாடி அவரிடம் பரிசில் பெற்றுவந்த ஒருவர், ஒரு கூத்தர், பாணர், பொருநர் அல்லது விறலி ஆகியோருள் ஒருவரை எதிரில் கண்டு அந்த வள்ளலிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை. இங்கு ஆறு என்றால் வழி என்று பொருள்.

இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களுள் திருமுருகாற்றுப்படை சற்று மாறுபட்டது. முருகனிடம் அருள் பெற்றுத் திரும்பும் ஒரு பக்தன், இன்னொரு பக்தனிடம் முருகனிடம் சென்று அருள்பெறுமாறு ஆற்றுப்படுத்துவது இது. இதில் முருகனது ஆறு படைவீடுகளும் அவற்றின் சிறப்புகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இது 317 அடிகளைக் கொண்டது.

248 அடிகளைக் கொண்ட பொருநராற்றுப்படை சோழன் கரிகால் பெருவளத்தானின் வள்ளண்மையைச் சிறப்பித்துக் கூறுகிறது.

சிறுபாணாற்றுப்படை என்ற நூல் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் என்னும் வேந்தனின் சிறப்பியல்புகளை விரிவாக எடுத்தியம்புகிறது. இது 269 அடிகளைக் கொண்டது.

500 அடிகளைக் கொண்ட பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்ற வேந்தனின் கொடைத்திறனைப் புகழ்ந்து பாடுகிறது..

தொண்டைநாட்டுப் பல்குன்றக் கோட்டத்து செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்ற பெரும் கொடைத்திறம் படைத்த வேந்தனைப் பற்றிய மலைபடுகடாம் 589 அடிகளைக் கொண்டது.

இந்தப் புலவர்கள் தாம் பரிசில் பெற்று வந்த அரசனிடம் செல்லுமாறு கூறிய வழியில் காணப்படும் ஊர்களையும், நிலங்களையும், அங்கு வாழும் மக்களையும், அவர்களின் உணவு, உறைவிடம், வாழ்வுமுறை ஆகியவற்றையும் பற்றிய விளக்கமான சொல்லோவியங்கள் பண்டைத் தமிழகத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றன.

அடுத்து, 103 அடிகளைக் கொண்ட முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களில் மிகச் சிறியதாகும். இது ஓர் அகப்பாடலாகும். போர்மேற் சென்றிருக்கும் அரசனின் வருகையை எண்ணிக் காத்துக்கிடக்கும் ஓர் அரசியின் மனநிலையை வெகு தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறது இது.

ஆறாவதாக அமைந்திருக்கும் மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டு மிகப் பெரிய பாடலாக உள்ளது. மதுரை மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இவ்வுலகத்து வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துச்சொல்லுவது இது.. சங்க காலத்து மதுரையை அப்படியே நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது இப்பாடல்.

188 அடிகளைக் கொண்ட நெடுநல்வாடை படையெடுத்துச் சென்ற ஒரு பாண்டிய மன்னனின் பாசறைக் காட்சியையும், அவனைப் பிரிந்து வருந்தும் அரசியின் துயரமான நிலையினையும் மிக அழகிய நடையில் எடுத்தியம்புகிறது. இந்தப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே என்று கொண்டு இதனைப் புறப்பாடல் என்று கூறுவர். பாண்டிய மன்னனைப் பற்றிய பொதுவான ஒரு சிறு குறிப்பினைத் தவிர ஏனைக் காட்சிகளைக் கொண்டு இதனை அகம் என்று கூறுவாரும் உளர். சிலர் இதனை அகப்புறம் என்று வகைப்படுத்துவர்.

கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு என்ற அகப்பாடல் 261 அடிகளைக் கொண்டது. இது ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குப் பாடப்பட்டது என்பர். தமிழ்ப் பெண்களின் கற்பொழுக்கத்தை விதந்து போற்றுகிறது இந்நூல். இப்பாடலில் கபிலர் 99 வகை மலர்களை அழகுற வரிசைப்படுத்திப் பாடியிருப்பது அனைவரின் மனத்தையும் கொள்ளைகொள்ளும்.

சோழன் கரிகால் பெருவளத்தானின் கொடைத் திறத்தையும், காவிரி ஆற்றின் பெருமையையும், பூம்புகார் நகரின் மேன்மையான நிலையையும் மிக விரிவாக எடுத்துக்கூறுவது பட்டினப்பாலை என்னும் நூல். இது 301 அடிகளைக் கொண்டது.

பொதுவாக, பண்டைய தமிழரின் பண்பாட்டுக்கூறுகள் பலவற்றையும், பல வரலாற்றுச் செய்திகளையும் இந்தப் பத்துப்பாட்டு நூல்களால் அறியலாம்..

You may also like

1 comment

B.MOHAN June 18, 2020 - 3:08 pm

பண்டை கால மக்களின் வரலாற்றினை பற்றி அறிய சங்க கால இலக்கியங்களும் இடைக்கால கல்வெட்டுக்களும் சில புழங்குப்பொருட்களும் உறுதுணையாக உள்ளன .அச்சிறப்பு மிக்க கல்வெட்டுகள் குறித்த அறிவினைப் பெறுதல் அக்கால வரலாற்றினை தெளிவாக அறிந்து கொள்ள உதவும்.

Reply

Leave a Comment