Home Dr.P.Pandiyarajah சங்கத் தமிழ் நூல்கள் – ஓர் அறிமுகம்

சங்கத் தமிழ் நூல்கள் – ஓர் அறிமுகம்

by admin
0 comment

பேராசிரியர் ப.பாண்டியராஜா, மதுரை.

தமிழ்மொழி ஒரு செம்மொழி என்பதை இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் தமிழ்மொழியிலுள்ள சங்க இலக்கிய நூல்களே ஆகும். இந்த நூல்கள் அனைத்தும் செய்யுள்கள் அல்லது செய்யுள்களின் தொகுப்புகளாகும். இந்த நூல்களிலுள்ள மொத்தச் செய்யுள்களின் எண்ணிக்கை 2381 ஆகும். இவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 473 ஆகும். இந்தப் புலவர்களில் வணிகர், குயவர் போன்ற பலவகையான தொழில்களைச் செய்வோர் உண்டு. நாடாளும் மன்னர்களும் பல பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில் பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாகும். இந்தச் சங்க நூல்களின் பெரும்பாலானவை கி.மு 300-க்கும் கி.பி.200 -க்கும் இடைப்பட்ட பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்டவை.

சங்கம் என்ற சொல்லுக்கு அவை அல்லது சபை என்று பொருள். தமிழ் அறிஞர்களின் சபை தமிழ்ச்சங்கம் எனப்பட்டது. தமிழ் இலக்கிய ஆய்வும் செய்யுள் இயற்றுதலும், வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்களைத் தொகுப்பதுவும் இதன் பணி. இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் சங்க நூல்கள் கடைச் சங்க நூல்கள் எனப்படும். இதற்கு முன்னர் முதற்சங்கம், இடைச் சங்கம் என்ற இரண்டு சங்கங்கள் இருந்ததாகவும், அவற்றில் தொகுக்கப்பட்ட நூல்கள் கடற்கோளால் அழிக்கபட்டன என்றும் மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. அவற்றுள் முதற்சங்கம் என்பது தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும் இருந்தன என்றும் அறிகிறோம். மூன்றாம் சங்கமான கடைச்சங்கம் இன்றைய மதுரையில் இருந்தது. இந்தச் சங்கங்களை உருவாக்கி, ஆதரித்து, வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள்..

சங்கம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் மன்னர்களின் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகக் குறிப்புகள் அங்கு உண்டு..

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவன் ஆக

உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக என் நிலவரை

என்று பாண்டிய மன்னன் ஒருவன் பாடிய பாடல் ஒன்று புறநானூறு என்ற சங்க நூலில் காணப்படுகிறது. இதில் பாண்டியன் அவையில் புலவர்களின் அவை ஒன்று இருந்ததும், அந்த அவையின் தலைவராக மாங்குடி மருதன் என்னும் புலவர் இருந்ததும், புலவர்கள் செய்யுள் பாடியதும் கூறப்பட்டுள்ளது.

வச்சிரநந்தி என்ற சமண முனிவர் கி. பி. 470 -இல் மதுரையில் திரமிள சங்கம் என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தேவசேனர் என்னும் சமண ஆசிரியர் தமது நூலில் குறிப்பிடுகிறார். திரமிள சங்கம் என்றால் தமிழ்ச் சங்கம் என்பது பொருள். ஆனால், வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் இலக்கிய நூல்கள் இயற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சங்கம் அல்ல. மாறாக, அது சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்துப்பட்ட சங்கம். இதனை ஒட்டியே பிற்காலத்து இலக்கியவாதிகள் பாண்டியரின் தமிழாய்ந்த புலவர் அவையைத் தமிழ்ச் சங்கம் என்று அழைக்கலாயினர்.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும்

மதுராபுரிச் சங்கம் வைத்தும்

என்று சின்னமனூர்ச் செப்பேடுகளில் காணப்படும் குறிப்பு பாண்டியரின் புலவர் பேரவையைப் பற்றியதே.

இந்தச் சங்கப்பாடல்களுள் நெடும்பாடலாக இருக்கும் பத்துப் பாடல்களைத் தொகுத்து அதனைப் பத்துப்பாட்டு என்று பெயரிட்டனர். அவை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை என்பன. இவற்றுள் திருமுருகாற்றுப்படை காலத்தால் மிகவும் பிற்பட்டது என்பர் ஆய்வாளர். இவற்றுள் மிகச் சிறியது 103 அடிகளைக் கொண்ட முல்லைப்பாட்டு என்ற பாடலாகும். மிகப்பெரியது 782 அடிகளைக் கொண்ட மதுரைக்காஞ்சி என்ற பாடல்.

அடுத்து நூற்றுக்கணக்கான குறும்பாடல்களைப் பல்வேறு தலைப்புகளில் பிரித்து அவற்றை எட்டுத்தொகுதிகளாக ஆக்கினர். இவை எட்டுத்தொகை நூல்கள் எனப்படும். அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன. இவற்றுள் பரிபாடலும், கலித்தொகையும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்பர்..

இந்தச் சங்க நூல்கள் எதைப்பற்றிப் பாடுகின்றன? மிகப்பெரும்பாலும் அவை மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பற்றிப் பாடுகின்றன. அதிலும் பெரும்பாலான பாடல்கள் காதல்வயப்பட்ட ஆண்/பெண்ணின் அக உணர்வுகளை மிக அழகாக எடுத்தியம்புகின்றன. அவற்றின் மூலம் பண்டைத் தமிழரின் அன்றாட வாழ்க்கைமுறைகளை அழகிய சொல்லோவியங்களாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன.  புறநானூறு என்ற ஒரு நூல் மன்னர்களைப் பற்றியும் அவர்களிடையே நடந்த போர்களைப்,பற்றியும்,  வள்ளல்களைப் பற்றியும், பெருமையுடன் விவரிக்கிறது. ஆங்காங்கே மனித வாழ்வின் ஆழ்ந்த தத்துவங்களையும் சொல்லிப்போகிறது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

என்ற உலகம் வியந்து பாராட்டும் ஒற்றை வரி இந்தப் புறநானூற்றில் உண்டு.

சங்க இலக்கியங்கள் சொற்செறிவு மிக்கவை. குறைந்த அளவு சொற்களில் மிகுந்த பொருளைத் தரக்கூடியனவாய்த் திகழ்கின்றன. பொதுவாக இயற்கையை ஒட்டிய விவரணங்களே சங்க இலக்கியத்தில் உண்டு. புனைவுச் செய்திகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. உவமைகளைக் கையாளுவதில் சங்கப் புலவர்கள் பெரும் திறன் வாய்ந்தவர்கள். ஒரு பறவையைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் மூக்கு, சிறகு, கால்கள், கால்நகங்கள் என நுணுக்கமான வர்ணனைகளைக் கொடுப்பதில் வல்லவர்கள்.

சங்க இலக்கியங்களில் மதக் கோட்ப்பாடுகள் குறிப்பிடப்படவில்லை. இவற்றில் மிகவும் பிற்பட்ட காலத்தவை என்று கருதப்படும் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களில் பல இந்து மதக் கடவுளர்களும், புராணச் செய்திகளும் அதிகமாகக் காணப்பட்டாலும், சங்க இலக்கியங்கள் மிகப்பெரும்பாலும் மதச்சார்பற்றவை – non-religious – என்றே கூறலாம்.

பொதுவாக, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம், மத நம்பிக்கைகள், கலாச்சாரம், வாழ்வியல்நெறிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் காண உதவும் பலகணி அல்லது ஜன்னல் என்று சங்க இலக்கியங்களைக் குறிப்பிடலாம்.

A.K.Ramanujan என்ற ஆய்வாளர் கூறுவார், “These poems are not just the earliest evidence of Tamil genius. The Tamils in all their 2000 years of literary effort wrote nothing better”.

You may also like

Leave a Comment