Home Courses சங்கத் தமிழ் நூல்களின் பொதுப்பண்புகள்

சங்கத் தமிழ் நூல்களின் பொதுப்பண்புகள்

by admin
0 comment

முனைவர் ப.பாண்டியராஜா

பண்டைத் தமிழ் மக்கள் தம் வாழ்க்கையை அகம், புறம் என்று இரு பிரிவுகளாகப் பிரித்தனர். உள்ளத்தால் ஒத்த ஓர் ஆணும், பெண்ணும், தாம் பெற்ற இன்பத்தை அப்படியே மற்றவருக்கு எடுத்துரைக்க முடியாது. அத்தகைய உள்ள உணர்வுகளை அகம் என்று குறிப்பிட்டனர். மற்றவருக்குப் புலனாகக் காட்டப்படும் உணர்வுகளான வீரம், கருணை ஆகியவற்றைப் புறம் என்று குறிப்பிட்டனர். இந்த அக உணர்வுகளை எடுத்துரைக்கும் பாடல்களை அகத்திணைப் பாடல்கள் என்றும், புற உணர்வுகளை எடுத்துரைக்கும் பாடல்களைப் புறத்திணைப் பாடல்கள் என்றும் கூறுவர். திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.

இந்த அகத்திணைப் பாடல்கள் யாரோ ஒருவரின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதில்லை. சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார் என்பது பொது விதி. பொதுவான மனித உணர்வுகள் இங்கு பாடுபொருளாய் அமைந்தன.. பாடலுக்குரிய ஆண் தலைவன் என்றும், பெண் தலைவி என்றும் அழைக்கப்பட்டாள். இவர்களுடன் தோழி, பாங்கன் எனப்படும் தோழன், செவிலித்தாய், நற்றாய் எனப்படும் பெற்றதாய், தூதுவராகச் செல்லும் கூத்தர், பாணர் இங்கே உடன் பாத்திரங்களாய் அமைவர். இவர்களில் யாரேனும் ஒருவரின் கூற்றாகவே பெரும்பாலான பாடல்கள் அமையும். பாடல்கள் கற்பனையான நாடகப் பாங்கில் அமையும்.

புறத்திணைப் பாடல்கள் மிகப்பெரும்பாலும், மன்னர்களைப் பற்றியும், அவர்களிடையே நடந்த போர்களைப் பற்றியுமான செய்திகளைக் கொண்டவை. போரினைத் தடுக்க புலவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், நெறிதவறிய மன்னனுக்குக் கூறப்பட்ட அறிவுரைகள், பொதுவான வாழ்வியல் நெறிகள் ஆகிய சிறப்பம்சங்களையும் இவை கொண்டிருக்கின்றன.

மிகப்பெரும்பாலான சங்கப் பாடல்கள் ஆசிரியப்பா எனப்படும் அகவற்பா என்ற செய்யுள் வகையில் இயற்றப்பட்டுள்ளன. ஒருசில பாடல்கள் வஞ்சிப்பா கலந்த ஆசிரிய நடையில் உள்ளன. கலித்தொகை என்ற நூல் கலிப்பா வகையினைச் சேர்ந்த பாடல்களைக் கொண்டது. வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் இலக்கணங்கள் கலந்தது பரிபாடல் என்னும் சங்க நூல்.

பாடுகின்ற எந்தப் பாடலும் ஒரு பொருளைப் பற்றியதாக இருக்கவேண்டும். அந்தப் பொருளை விளக்கப் பல துணைப்பொருள்கள் பயன்படுத்தப்படலாம். இந்தப் பொருள்கள் இன்னின்ன என்று வகைப்படுத்திக் கூறுகிறது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். இதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றியே சங்க இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன எனலாம்.

அகத்திணை என்பது ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்பன. இவற்றுள் முதல் ஐந்து திணைகள் சிறப்பானவை என்பதால் அவை அகன் ஐந்திணை எனப்படும். கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம்.

ஒருவனும் ஒருத்தியும் கண்டு காதல்கொள்வதும், தம் காதலைப் பற்றிப் பெருமையுடன் பேசிக்கொள்வதும் குறிஞ்சி எனப்படும். ஏதோ ஒரு காரணத்தினால் தலைவன் பிரிந்து வெளியூர் சென்றிருக்கும்போது தலைவி வீட்டில் பொறுமையுடன் காத்திருப்பது முல்லை. தலைவன் மீது தலைவி பிணக்கு கொண்டால் அது ஊடல். இந்த நிலை மருதம் எனப்படும். தலைவன் பிரிந்திருக்கும்போது தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கியிருக்கும் நிலை நெய்தல். தலைவனின் பிரிவை எண்ணி தலைவி மனம் நொந்து வேதனைப்படுவது பாலை எனப்படும். கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இவை இரண்டும் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டன.

ஒவ்வொரு திணைக்குமுரிய பாடுபொருள் அதன் உரிப்பொருள் எனப்படும். காட்டாக, மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல்நிமித்தமும். இந்தப் பொருளைச் சிறப்பித்துக் காட்ட சில துணைப்பொருள்கள் எடுத்துக்கொள்ளப்படும். துள்ளிக்குதிக்கின்ற மான்களுக்கு நடுவே சோகமான பெண்ணைக் காட்டமாட்டார்கள். இன்னின்ன உணர்வுகள் இன்னின்ன இடங்களிலும் இன்னின்ன பொழுதுகளிலும் மிகுந்து காணப்படும் என்று பகுத்து வைத்திருக்கின்றனர். இந்த இடம் அல்லது நிலம், பொழுது அல்லது காலம் எனப்படுபவை அந்தப்பாடலின் முதற்பொருள் எனப்பட்டன. அந்த இடம் அல்லது பொழுதைச் சார்ந்த மக்கள், அவர்களின் உணவு வகைகள், விலங்குகள், பறவைகள், மரங்கள் ஆகியவை பாடலின் கருப்பொருள் எனப்பட்டன. காட்டாக, மீனும், சுறாவும், நாரையும், தாழையும் நெய்தல் திணைக் கருப்பொருள்கள்.

ஒரு தலைவனும் தலைவியும் வாழும் காதல் வாழ்க்கை களவு, கற்பு எனப் பிரிக்கப்பட்டது. திருமணத்திற்கு முந்தைய காதல் ஒழுக்கம் களவு எனப்பட்டது. அதாவது, பிறர் அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம் இது. களவொழுக்கத்தின்போது அதை ஒருசிலர் அறிந்து தமக்குள் பேசிக்கொள்வது அம்பல். இதுவே ஊரறியப் பேசினால் அது அலர். இந்த அம்பல் மலர்ந்து அலராக மாறும்போது பெற்றோர் அறிந்து அவர்களுக்கு மணம் முடித்துவைக்கலாம். அவ்வாறில்லாமல் எதிர்ப்பு வந்தால் தலைவியைத் தலைவன் இரகசியமாய் அழைத்துச் செல்வான் .அது உடன்போக்கு எனப்படும். இவ்வாறாகத் தலைவனும் தலைவியும் மணம் முடித்து வாழும் ஒழுக்கம் கற்பு எனப்பட்டது. மொத்தமுள்ள 2381 சங்கப்பாடல்களில் அகத்திணைப் பாடல்கள் மட்டும் 1862. இது ஒன்றே அகத்திணையின்பால் புலவர்க்கு ஏற்பட்ட ஈர்ப்பினைத் தெரிவிக்கும்.

அகத்திணைகள் ஏழனுக்கும் இணையான புறத்திணைகள் ஏழு உண்டு. குறிஞ்சிக்கு நேரானது வெட்சி. இது பகைப்புல நாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதைப் பாடுவது. முல்லைக்கு நேரானது வஞ்சி. இது தன்மீது போர்தொடுக்க எண்ணிய மன்னன்மீது படையெடுத்துச் செல்வது. மருதத்துக்கு நேரானது உழிஞை. இது பகை மன்னனின் கோட்டையை முற்றுகையிடுதலும் அழித்தலும். நெய்தலுக்கு நேரானது தும்பை. இது தன்மீது படையெடுத்து வந்த மன்னனை எதிர்கொள்ளல். பாலைக்கு நேரானது வாகை. இது வெற்றியைக் குறிக்கும். இன்றைக்கும் ஏதாவது வெற்றியடைந்தவரைப்  பார்த்து வாகை சூடினார் என்று கூறுவது மரபல்லவா! கைக்கிளைக்கு நேரானது பாடாண் திணை. இது பாடப்படும் ஆண்மகனின் வீரம். புகழ், வள்ளண்மை ஆகியவற்றைப் புகழ்ந்து பாடுவது. பெருந்திணைக்கு நேரானது காஞ்சி. இது நிலையாமையைக் குறிக்கும்.

புறத்திணைப் பாடல்களில் போர் பற்றிய பாடல்கள் மட்டுமின்றி அரசர்களை நல்வழிப்படுத்திய பாடல்கள் பல உண்டு. பேகன் என்ற மன்னன் தன் மனைவி கண்ணகியை விட்டு பிரிந்து இன்னொருத்தியுடன் கூடி வாழ்ந்த போது தமிழ்ப் புலவர்கள் பலர் சென்று, அவனுக்கு அறிவுரை கூறி அவனை மனைவியுடன் சேர்த்துவைத்த செய்தியைக் கூறும் பாடல்கள் உண்டு. நன்னெறி நல்கல் வேந்தர்க்குக் கடனே என்று ஒரு பெண் எடுத்துக்கூறும் பாடல் உண்டு.

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்

என்று தம் நாட்டுச் சான்றோரை ஒரு பாண்டிய மன்னன் வியந்து பாடும் பாடலும் உண்டு.

பொதுவாக, சங்க இலக்கியத்து அகப்பாடல்கள் உடல் இன்பத்தைப் பெரிதுபடுத்திப் பேசுவதில்லை. மாறாக உள்ளத்து நுண்மையான உணர்வுகளை வெளிக்கொணர்ந்து வாழ்வியலின் முறைகளைப் பேசுகின்றன. புறப்பாடல்கள் போர்வெறியைத் தூண்டுவதில்லை. மாறாக, ஒரு மன்னனின் உண்மையான நிலைத்துநிற்கும் புகழ் எது என்பதை உணர்த்திக்காட்டி வாழ்வியலின் நெறிகளைப் பேசுகின்றன.

You may also like

Leave a Comment