Home Courses எட்டுத்தொகை நூல்கள் – ஓர் அறிமுகம்

எட்டுத்தொகை நூல்கள் – ஓர் அறிமுகம்

by admin
0 comment

முனைவர் ப.பாண்டியராஜா

சங்கத் தமிழ் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு நூலுமே ஒரு தொகுப்பு எனலாம். இவற்றில் உள்ள பாடல்கள் பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இந்தப் பாடல்கள் மிகப்பெரும்பாலும் கி.மு 300 க்கும் கி.பி 200 க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவை. ஆனால் இவை தொகுக்கப்பட்ட காலம் கி.பி 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டு என்று கருதுவர்.

எட்டுத்தொகை நூல்களாவன: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை.. இவற்றை ஓர் அழகிய வெண்பா வரிசைப்படுத்தும்.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை

இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகம் பற்றிய பாடல்களைக் கொண்டவை. பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகியவை புறம் பற்றிய பாடல்களைக் கொண்டவை. பரிபாடல் அகம், புறம் ஆகிய இருவகைப் பாடல்களையும் கொண்டது.

எட்டுத்தொகைப் பாடல்கள் மிகப்பெரும்பாலும் ஆசிரியப்பா எனப்படும் அகவற்பா இனத்தைச் சேர்ந்தவை. ஒரு சில பாக்கள் வஞ்சி அடிகள் கலந்து வரக் காண்கிறோம். கலித்தொகை முழுவதும் கலிப்பா வகையைச் சேர்ந்த பாடல்களைக் கொண்டது. பரிபாடல் வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் இலக்கணங்களைக் கொண்டது.. இந்த எட்டுத்தொகைப் பாடல்களுள் மிகச் சிறிய பாடல் 3 அடிகளைக் கொண்டதாகவும், மிகப்பெரிய பாடல் 140 அடிகளைக் கொண்டதாகவும் உள்ளது. ஆசிரியப்பா வகையில் அமைந்த அகத்திணைப் பாடல்களில், பாடல் அடிகளின் எண்ணிக்கையைக் கொண்டு இப் பாடல்களை பல்வேறு தொகுப்புகளாகக் கொண்டனர். .

3 முதல் 6 அடி வரையிலான பாடல்கள் இருப்பது ஐங்குறுநூறு

4 முதல் 8 அடி வரையிலான பாடல்கள் இருப்பது குறுந்தொகை

9 முதல் 12 அடி வரையிலான பாடல்கள் இருப்பது நற்றிணை

13 முதல் 31 அடி வரையிலான பாடல்கள் இருப்பது அகநானூறு

இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய நூல்கள் ஏறக்குறைய 400 பாடல்களைக் கொண்டவை. இவற்றில் ஐந்து திணைகளைச் சார்ந்த பாடல்களும் பல்வேறு எண்ணிக்கைகளில் கலந்து உள்ளன.

ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் என்று கொண்டு 500 பாடல்களைக் கொண்டது ஐங்குறுநூறு.

அகநானூறுக்கு இணையாகப் புறப்பாடல்கள் 400-ஐத் தொகுத்து அதனைப் புறநானூறு என்றனர். இப்பாடல்களுக்கு அடி வரையறை இல்லை.. இந்தப் புறநானூற்றில் சில பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.. புறத்திணைப் பாடல்கள் மிகப் பெரும்பாலும் மன்னர்களைப் பற்றியும், அவர்களிடையே நடந்த போர்களைப் பற்றியும் அவர்களின் கொடைத்திறம் பற்றியும் கூறுவன. எனினும், புறத்திணைகளுள் வாழ்க்கைக்கு என்றும் இன்றியமையாத அறங்களையும், ஒழுக்கங்களையும் வலியுறுத்தும் பாடாண் முதலிய துறைகளையும் பாடியுள்ளனர்

கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக் கலி என்று ஒவ்வொரு திணைக்குமான பாடல்கள் தனித்தனியே பகுக்கப்பட்டுள்ளன.

பதிற்றுப்பத்து என்பது பத்து சேர மன்னர்களைப் பற்றி, ஒவ்வொரு மன்னனுக்கும் பத்துப்பாடல்கள் என்ற வகையில் 100 பாடல்களைக் கொண்டிருந்தாலும், இன்றைக்கு நமக்குக் கிடைத்திருப்பன முதற்பத்தும், இறுதிப்பத்தும் தவிர இடையிலிருக்கும் 80 பாடல்களே. முழுக்க முழுக்க சேர மன்னர்களைப் பற்றிய பாடல்களைக் கொண்டது இந்நூல் என்ற சிறப்பு இதற்கு உண்டு.

பரிபாடல் என்பது பண் வகுக்கப்பட்ட இசைப்பாடல்களைக் கொண்டது. இது 70 பாடல்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், நமக்குக் கிடைத்திருப்பன 22 பாடல்களே. இவற்றுள் திருமாலைப் பற்றி 6 பாடல்களும், செவ்வேள் என்ற முருகனைப் பற்றி 8 பாடல்களும் வையை ஆற்றைப்பற்றி 8 பாடல்களும் அடங்கும். இவற்றில் புராணச் செய்திகள் பல உண்டு.

பொதுவாக, பண்டைய தமிழரின் பண்பாட்டுக்கூறுகள் பலவற்றையும், பல வரலாற்றுச் செய்திகளையும் இந்த எட்டுத்தொகை நூல்களால் அறியலாம்.

You may also like

Leave a Comment